குரங்கணி மலையில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 39 பேர் சிக்கிக்கொண்டனர். முதற்கட்டமாக 12 பேர் மீட்கபட்டனர். இந்த நிலையில்  குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 10 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இலக்கியா, சபிதா, சுவேதா, கண்ணன் ஆகியோர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.  99 சதவீதம் தீக்காயங்களுடன் உள்ள அனுவித்யா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளார், 

மேலும் தேனி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கண்ணனுக்கு தீக்காயம் 40 சதவீதமாக உள்ளது.

கோவை சூலூரில் இருந்து 6 கமாண்டோக்கள் கொண்ட  குழுவினர் குரங்கணி மலைப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உயிரிழப்பு குறித்து அரசு எந்தவிதமான தகவல்களையும் தெரிவிக்காத நிலையில் பொன்னார் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறிது நேரத்தில் 8 பேர் உயிரிழந்ததாக வெளியிட்ட தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு, 8 பேர் சிக்கியுள்ளதாக மாற்றி பதிவிட்டுள்ளார்.