குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் 18-ந்தேதி காலியாகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் அங்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பாக அதன் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமான பல்விந்தர் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் போட்டியிட்டார்.

இதில் விதிமுறைகளை மீறி வாக்களித்ததாக புகார் எழுந்ததால் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் இரவு 11.30-க்கு நடத்தப்பட்டது. இதன் முடிவில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி மற்றும் அகமது படேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில பொறுப்பாளர் அசோக் கெலாட் கூறுகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவர்கள் அனைவரும் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு சென்ற மூத்த அரசியல்வாதி சங்கர்சிங் வகேலாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.