8 affidavits filed about jayalalitha death
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் 8 பேர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் ஜெயலலிதா மரணமடைந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

எனவே ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளும் அப்போது கட்சியை விட்டு தனித்து செயல்பட்ட பன்னீர்செல்வம் அணியினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையம், விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், அத்தகவல்களை ஆணையத்திற்கு அனுப்பலாம் என தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக திமுக சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சரவணன், ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பக வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சரவணனுக்கு விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மேலும் 8 பேர் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளதாக விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இதுவரை 70 கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
