திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை சரியாக 6:10 மணிக்கு மரணமடைந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடி இருந்த திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பலர் தங்களுடைய தலைவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அழுது கதறினர்.

இதைதொடர்ந்து திமுக சார்பில் இருந்து, கலைஞர் கருணாநிதியின் உடல் 8.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கோபாலபுரத்திலும், பின்னர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிஐடி நகர் இல்லத்திலும் அதன் பின்னர் காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவரது உடல் இன்று தகனம் செய்யப்படுவதால், "8.8.2018" தொண்டர்கள் மத்தியில் சரித்திர தினமாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது, என கூறப்பட்ட நிலையில். பொது விடுமுறை அறிவித்தும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழக்க வேண்டும் என்ற வழக்கு மட்டும் உயர்நீதி மன்றத்தில் நடந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக-விற்கு ஆதரவாக கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என தீர்ப்பு வழங்கினர். எனவே மறைந்தும் திமுக தலைவர் போராடி வெற்றியடைந்துள்ளார் என இந்த தீர்ப்புக்கு வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து, காசி புரோகிதர் தம்புசாமி என்பவர் அதிரடி கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், ஏகாதசி மாரணம்...துவாதசி தகனம்...கருணாநிதி ஒரு புண்யாத்மா..என தெரிவித்து உள்ளார். அதாவது ஏகாதசி நாளான நேற்று , திமுக தலைவர் கருணாநிதி மறைந்துள்ளார் என்றும் இந்த நன்னாளில் அவர் மறைந்தது மிகவும் புனிதமானது என்றும், இன்று துவாதசி தகனம் என்றும், மொத்தத்தில் கருணாநிதி புண்யாத்மா என்றும் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.