சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58- வது குருபூஜையையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், பாண்டியராஜன், பென்ஜமின், எம்.சி.சம்பத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- 7.5%  உள்ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உள்ஒதுக்கீடு தொடர்பான அரசாணையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்.

மேலும், சென்னையில் 13 இடங்களில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் தயார் நிலையில் படகுகள் உள்ளன. சென்னையில் கனமழையால் தேங்கிய மழைநீரை இரண்டு மணி நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர் என தெரிவித்துள்ளார்.