Asianet News TamilAsianet News Tamil

குஜராத் முதல் கட்ட தேர்தலில் 68 சத வாக்குப்  பதிவு! தேறுவாரா ராகுல்..?

Voting has concluded in 89 constituencies of southern Gujarat and Saurashtra in the first phase of state assembly elections 68 percent voting recorded till 5pm
68 percent voting recorded till 5pm in gujrat first phase
Author
First Published Dec 9, 2017, 7:08 PM IST


குஜராத் மாநிலத்தில் நடந்த முதல் கட்டத் தேர்தலில் இன்று மாலை 5 மணி நிறைவில் 68 சத  வாக்குகள் பதிவானதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சௌராஷ்டிரா, தெற்கு குஜராத் பகுதிகளில் உள்ள தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வாரியாக, மோர்பி மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 சதவீதமும்,  போர்பந்தர், போதாட் ஆகிய மாவட்டங்களில் குறைந்த பட்சமாக 60 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 19 மாவட்டங்களில்  காலை 8 மணி முதல், மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி, சராசரியாக 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததற்காக பாராட்டு தெரிவித்துள்ளார் அருண் ஜேட்லி. பாஜக., நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அருண் ஜேட்லி. 

பரூச் மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியில், தாங்கள் ஒரு வாக்காளருக்கு அளித்த ஓட்டு, வேறு வாக்காளருக்கு விழுந்துவிட்டதாக புகார் கூறி வாக்குச்சாவடி அலுவலரிடம் 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். அதற்கு அவர், அவர்களை வைத்துக் கொண்டு சோதிப்பதாகவும், அவ்வாறு தவறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், அந்த 4 பேரும் அவ்வாறு சோதனைக்கு ஒப்புக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றதாக, பரூச் மாவட்ட ஆட்சியர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இந்தத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வடநகரில் உள்ள மஹ்சனாசில் பேசியபோது, இந்தத் தேர்தல் எனக்கோ அல்லது மோடிக்கோ ஆனது அல்ல, இது குஜராத்தின் எதிர்காலத்திற்கான தேர்தல் என்று கூறினார். 

இதனிடையே வடக்கு குஜராத் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, வடக்கு குஜராத்தில் இருந்து மக்கள் காங்கிரஸை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிப்பார்கள் என்று பேசினார். மேலும், உத்திரப் பிரதேசம்தான் பண்டிட் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என மூன்று பிரதமர்களைத் தந்தது. ஆனால், இப்போது உ.பி., மக்கள் அமேதியில் இருந்து ரேபரேலியில் இருந்தும் காங்கிரஸை ஒதுக்கிவிட்டுள்ளனர் என்று கூறினார். 

குஜராத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாஜகவே ஆட்சியில் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து 5-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் அக்கட்சி உள்ளது. 

பாஜக சார்பில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios