கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை மதோவை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து அது சட்டமாக மாறியது. 

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அசோம் கண பரிஷத் உள்ளிட்டவை தாக்கல் செய்த மனுக்களும் அடங்கும்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த 60 மனுக்களையும் இன்று விசாரிக்கிறது. 

நீதிபதிகள் பி.ஆர்.காவே மற்றம் சூரிய காந்த் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர். மதம் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது புதிய சட்டம் மற்றும் மத அடிப்படையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்வது வாழ்க்கை மற்றும் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் மனுதாரர்கள் கூறியிருப்பதாக தகவல்.