ரசாயன தொழிற்சாலையில் உள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரசாயண ஆலை விபத்து

ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகுடெம் போரஸ் ஆய்வகம் உள்ளது. இந்த ஆய்வகத்தில் நேற்று இரவு 30 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்தில் கரும்புகை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. 9 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்துள்ளனர்.

அணுஉலை வெடித்ததா?

உயிருக்கு போராடி வந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை போலீசார், வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் தேவ் சர்மா கூறுகையில், விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அணுஉலை வெடித்ததா அல்லது ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறினார்.

விசாரணை நடத்த உத்தரவு

ஏலூர் மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகுடெம் போரஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவ உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.