தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை எனவும், சமூக வலைதளங்களில் இதுபோன்று வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை சேமிப்பது மற்றும் அதன் விளைவுகளை எதிர்நோக்குவது குறித்து அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர்கள் செய்தியாளரிடம் கூறியதாவது:  

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பொழிந்து வருகிறது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது, 11 மாவட்டங்களில் அதிக அளவில் மழையும், 20 மாவட்டங்களில் இயல்பான மழையும் பதிவாகி உள்ளது. ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழையே பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் 14,144 பாசன ஏரிகளில் 3,982 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்றார். இந்நிலையில் தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வரை சந்தித்தனர். பாதிப்புகளை ஆய்வு செய்து முதல்வரும்  உரிய கோரிக்கைகளை வைத்துள்ளார். 

மத்திய குழுவினரிடம் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினோம் என்றார், அதேபோல் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தமிழகத்தை ஐந்து புயல்கள் தாக்கப்போவதாகவும், அந்த புயல்களுக்கு பெயர் வைத்தும், ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால் மக்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பொய்யான ஆதாரமற்ற தகவல்களை கண்டு மக்கள் அச்சம் கொள்ள  தேவையில்லை, வானிலை ஆய்வு மையம் உரிய தகவல்களை வெளியிடுவார்கள், பேரிடர் காலங்களில் இதுபோன்ற பொய் தகவல்கள் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது  பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.