மே 3ம் தேதி பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி உள்ளிட்ட 5 மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலக முழுவதும் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா இந்தியாவில் பரவத்தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1990 பேர் பாதிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும். இதில், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்கள் நிலைமைதான் மோசமாக இருக்கிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 26,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,804 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 19,868 ஆக இருக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஊரடங்கு கால வரும் மே 3ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது,  5 மாநில முதல்வர்கள் மே 3ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் கூற உள்ளனர். 

ஏற்கனவே, மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே தன்னிச்சையாக தெலங்கானா முதல்வர் ஊரடங்கை மே 7ம் தேதி நீட்டித்துள்ளார். தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு ஊடரங்கை மே 16ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என  நாளை நடக்க உள்ள மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.