பஞ்சாப்பில் உள்ள பாகிஸ்தானுடனான எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன் றனர்.அவர்களிடமிருந்து 9.5 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே47 ரக துப்பாக்கி மற்றும் நான்கு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்தியா மட்டும் கொரோனாவுடன் சேர்த்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லை அத்துமீறல்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. இதுமட்டுமின்றி அந்நாட்டின் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவ முயன்று வருகின்றனர். இதனால் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய ராணுவ வீரர்கள் கண்கொத்தி பாம்பாக இருந்து எல்லையை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் 103வது பட்டாலியன் துருப்புகள் நேற்றிரவு எல்லை கண்காணிப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

பஞ்சாபின் டார்ன் தரன்  வழியாக சர்வதேச எல்லையை மீறி பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். அப்போது அதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது அந்த பயங்கரவாதிகள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். அதில் ஊடுருவலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை அனைவரும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அதிகாலையில் நடைபெற்றது, இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த அரை மணி நேரத்தில் மறுபுறம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரா முல்லா பகுதியில்  எல்லையில் ஊடுருவ முயன்ற ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். பஞ்சாபில் கொல்லப்பட்ட ஐந்து  ஊடுருவல்காரர்களின் சடலங்கள் சம்பவ இடத்தில் இருந்து  மீட்கப்பட்டது. அதில் அவர்களிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி மற்றும் நான்கு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 

மேலும் அவர்கள் 9.5 கிலோ ஹெராயின் வைத்திருந்ததும் தெரியவந்தது. தரன் தரன் மாவட்டத்திலுள்ள தால் போஸ்ட்  என்ற இடத்திற்கு அருகே இந்த என்கவுண்டர் நடந்தது. இந்நிலையில் வழக்கம் போல ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக, பிஎஸ்எப் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஊடுருவ  முயன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் பாகிஸ்தான் நாணயங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் இதற்கு முன்பாக பல ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் நடந்துள்ளன. சுமார் 45 மாதங்களுக்கு முன்பு பலர் பிடிபட்டனர். இந்த பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பாண்டி போராவில் காஷ்மீர் காவல் துறையால் ஐந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் பாண்டி போராவில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.