பாஜகவுக்கு எதிரான தம்பிதுரையின் தடாலடியால் தடுமாறித் தவித்து வருகிறார்கள் அதிமுக அமைச்சர்கள். ப்ரேக் இல்லாத லாரி போல வேகம் கூட்டி பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்து வருவதன் பின்னணியின் டி.டி.வி.தினகரன் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. 

பாஜக தயவில் அதிமுக அரசு காலத்தை ஓட்டி வருவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பாஜகவை பற்றி இதுவரை எந்த அமைச்சரும் கடுமையாக தாக்கிப்பேசியதில்லை. இந்நிலையில், மக்களவையிலேயே பாஜகவை விமர்சித்து மோடியை தாக்கினார். 15 லட்சம் பணம் கொடுப்பதாக சொன்ன வாக்குறுதி என்னவாயிற்று? என அவர் கேட்ட கேள்வியை பாஜக நிச்சயம் எதிர்பார்த்து இருக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சியமைக்குமே தவிர பாஜகவிற்கு இடம் கிடையாது என அடுத்த அதிரடியை கிளப்பினார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என தடாலடி கிளப்பினார். இதற்கு எதிர்வினையாற்றிய தமிழிசை பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது எனக் கூற தம்பிதுரைக்கு உரிமையில்லை என்றார். அதற்கு பதிலடி கொடுத்த தம்பிதுரை, பாஜக மாநில தலைவர் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது. மீறினால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மேட்டோம் என கடுமையாக எச்சரித்தார் தம்பிதுரை. எடப்பாடி பழனிசாமியே தம்பிதுரையை அழைத்து ‘ அண்ணே கொஞ்சம் அமைதியா இருங்க. இவ்வளவு ஆவேசம் வேண்டாம்’’ என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் தம்பிதுரை அடங்குவதாக இல்லை. 

தம்பிதுரை பேசுவது அதிமுகவின் கருத்தல்ல என அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதனால் தம்பிதுரை அதிமுகவை விட்டு விலகப்போவதாகவும், விரைவில் தனிகட்சி தொடங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சொந்தக் கட்சி தொடங்கும் அளவிற்கு தான் ஒர்த் இல்லை என தம்பிதுரையே ஒப்புக்கொண்டார்.

 

இந்நிலையில், தம்பிதுரையின் லாபிக்குள் ஐந்து எம்.எல்.ஏ.க்களும், ஐந்து எம்.பி.க்களும் அடங்கியிருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கி இருக்கின்றன. விரைவில் அவர் அமமுகவில் இணைய உள்ளதாக பகீர் கிளம்பி வருகிறது. எப்போதும் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பவர் தம்பிதுரை. அதிமுகவின் தற்போதைய நிலை அவருக்கு தெரியும். தன்னை பரம எதிரியாக கருதிய செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்று விட்டார். ஆகையால், அமமுகவுடன் இணைவதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை. அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து கொண்டே பாஜகவுடன் இணைய விடாமல் வில்லங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு அவர் நடந்து கொள்வதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

ஏற்கெனவே பிரிந்து சென்றதால் செந்தில்பாலாஜியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என தினகரன் காய்களை நகர்த்தி வருகிறார். அது தனக்கு கரூர் தொகுதியில் சாதகமாக அமையும் என திட்டமிட்டே தம்பித்துரை டி.டி.வி.தினகரன் அணியில் இணைய முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. 

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க ‘’தம்பிதுரை நாடகமாடுகிறார். அவர் பாஜகவுக்கு எதிராக பேசுவது எடப்பாடி விருப்பத்தின் பேரில்தான்’’ என டி.டி.வி.தினகரன் கொளுத்தி போட்டது அதிமுக- பாஜக கூட்டணி சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே. இந்தக் கூட்டணியை முறிக்கவே தம்பிதுரையுடன் சேர்ந்து தினகரன் காய் நகர்த்துகிறார்’  என்கிறார்கள் அதிமுகவினர்.    

இப்போதைக்கு அதிமுகவில் இருந்து கொண்டே அமமுகவுக்காக திட்டங்களை போட்டு வரும் தம்பிதுரை, தன்னுடன் எக்ஸ் எம்எல்ஏக்கள், எக்ஸ் எம்பிக்கள்  மட்டுமல்லாது கட்சி பதவி, கரன்சிக்கு ஆசைப்படும் நபர்களை அழைத்துச் செல்லும் திட்டம் இருக்கிறாராம். மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தம்பிதுரை தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.