5 percent gst for students mess bill

பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் செயல்படும் ‘மெஸ்’ களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த ‘மெஸ்’ வசதியை கல்வி நிறுவனம் அளித்தாலும், அல்லது தனியார் ஒப்பந்ததாரர் அளித்தாலும் அவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் 5, 12, 18, 28 சதவீதம் ஆகிய 4 விதமான வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்லூரி, பள்ளிகளில் செயல்படும் ‘மெஸ்’ சேவை வரி விதிப்புக்கு உட்படுமா என எழுந்த சந்தேகங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும், மத்திய கலால் மற்றும் உற்பத்தி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள், ஊழியர்களின் வசதிக்காக செயல்படும் ‘மெஸ்’ சேவையும் வரி விதிப்புக்கு உட்பட்டது. இந்த சேவையை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அல்லது தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக 5 சதவீதம் விதிக்கப்படும். 
மாணவர்களுக்கு உணவாக அளித்தாலும், அல்லது பானங்களாக கல்வி நிறுவனமோ அல்லது தனியார் ஒப்பந்ததாரர்களோ அளித்தாலும் அது ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.