கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணமாக தனியார் மருத்துவமனைகளை ரூ.43000 ரூபாயை வசூலித்துக் கொள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அமைப்பின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் எகிறி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க இடமின்றி கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.  இதனால் கிட்டத்தட்ட கொரனோ நோயால் இனி பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அதேவேலை தனியார் மருத்துவமனையில் கொரனோ சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்த கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக எழுந்து வருகின்றன. 

இதனையடுத்து தற்போது ஐ.எம்.ஏ தமிழக பிரிவு, கொரனோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டிய கட்டணம் குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்றும், அல்லது தினமும் ரூ.23,000 வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

அதேபோல் திவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 வசூலிக்கலாம் என்றும், அல்லது தினமும் ரூ.43,000 வசூலிக்கலாம் என்றும் ஐ.எம்.ஏ அறிவித்துள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9600 வரை நிர்ணயிக்கவும் ஐஎம்ஏ தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த கட்டணம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றால் சொத்தை விற்று தான் செல்ல வேண்டும். சொத்துக்கள் இல்லாத ஏழைகள் செத்துப்போவதை தவிர வேறு வழியே இல்லை எனப்புலம்பி வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.