தமிழ் சினிமாவில், அதிரடி நாயகனாகவும், அரசியல் தலைவராகவும் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் விரும்பும் படங்களாக உள்ளது. 

அரசியல் வாதிகளுக்கு எதிராக துணிந்து பேசும் நடிகர் என்றால் முதலில் இவருடைய முகம் தான் கண் முன்னே தோன்றும். இவர் தேர்வு செய்து நடித்த திரைப்படங்களான ரமணா, வல்லரசு, அலெக்ஸ்சேன்டர் உள்ளிட்ட படங்கள் இந்திய நாட்டின் பெருமைகளை முன்வைத்து எடுக்கப்பட்ட படங்கள். 

கோலிவுட் திரையுலகத்தில் இவரை சிறந்த நடிகராக பார்பவர்களை விட சிறந்த மனிதனாக பார்பவர்கள் அதிகம். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த போது திரைதுரைக்காக பல்வேறு வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தென்னிந்திய திரையுலகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர். 

1978 ஆம் ஆண்டு "இனிக்கும் இளமை" திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான இவர், பின் தன்னுடைய திறமையால் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர். 

தற்போது இவர் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனால் இதனை சிறப்பிக்கும் வகையில் இன்று மாலை 6 மணியளவில் இவரின், 40 ஆண்டுகள் கலைத்துறையின் சேவைக்காக பாராட்டுவிழா படப்பை ரோட்டில் கரசங்காலில் நடைபெற உள்ளது. மேலும் இவரின் இந்த சாதனைக்கு ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.