கர்நாடகாவைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், பாஜகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸோடு தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. 
மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. பகுஜன் சமாஜ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுடன் கமல்நாத் ஆட்சி நடத்திவருகிறார். மெஜாரிட்டிக்கு 116 எம்.எல்.ஏ.க்கள்  தேவை என்ற நிலையில் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்திவருகிறது காங்கிரஸ். பாஜகவுக்கு இங்கு 109 உறுப்பினர்கள் உள்ளனர். மிகவும் மெலிதான மெஜாரிட்டியில்தான் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது.


இதேபோல மெலிதான மெஜாரிட்டியில் கர்நாடகாவில் ஆட்சி செய்து வந்த குமாரசாமி அரசைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்துவந்தது. கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மூலம் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடகாவைப் போல மத்திய பிரதேசத்திலும் பாஜக ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. மத்திய பிரதேச பாஜகவினரும் தொடர்ந்து பூடாகமாகப் பேசிவருகிறார்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேச சட்டப்பேரவையில் ஒரு மசோதா மீதான வாக்கெடுப்பில் இரு பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி நீங்கும் முன்பே காங்கிரஸ் தொடர்பில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
இதுகுறித்து நர்மதா அறக்கட்டளை தலைவர் நம்தியோ தாஸ் தியாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்.  நேரம் வரும்போது அவர்கள் யார் என்பது தெரியவரும். அந்த எம்.எல்.ஏ.க்கள் கமல்நாத் அரசில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள்.  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழாது. கர்நாடகாவில் பாஜக நடத்தியதை இங்கே பாஜகவால் நடத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார். கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தினால், கர்நாடகாவில் நடந்ததுபோல இந்த 4 எம் எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள் என்று சொல்கிறார்கள் மத்திய பிரதேச காங்கிரஸார்.