சட்டப்பேரவை தேர்தலில் 3வது அணி அமைக்க தேமுதிகவிற்கு மட்டுமே துணிச்சல் உள்ளதாகவும் 3வது அணி அமைக்க தயாராகவே உள்ளதாகவும் விஜயபிரபாகரன் கூறியிருப்பது அதிமுக கூட்டணியில் குழப்பத்தை அதிகமாக்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்சிகள் பாமக, பாஜக மற்றும் தேமுதிக. இந்த 3 கட்சிகளில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் பாமக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசி வந்தன. அதிலும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு படி மேலே போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்திறனயே கேள்விக்கு உள்ளாக்கினார். இதனால் பாமக அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதே போல் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக பிடிகொடுக்காமல் அதிமுகவிற்கு அல்வா கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைமையில் 3வது அணி அமையுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சற்றும் தாமதிக்காமல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3வது அணி அமைத்து போட்டியிட்ட ஒரே கட்சி தேமுதிக தான் என்றார். தற்போதைய சூழலில் திமுக, அதிமுகவிற்கு மாற்று தேமுதிக தான் என்றும் இது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே 3வது அணி அமைத்து தேமுதிக தேர்தலை சந்தித்து இருப்பதையும் விஜயபிரபாகரன் சுட்டிக்காட்டினார். மேலும் தற்போதைய சூழலில் தேமுதிக 3வது அணிக்கு தலைமை ஏற்கும் நிலையில் தான் உள்ளது என்றும், தேவைப்பட்டால் மூன்றாவது அணிக்கு தேமுதிக தலைமை ஏற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். செய்தியாளர்கள் ஒரே ஒரு கேள்வி கேட்க அதற்கு விஜயபிரபாகரன் மிகவும் விளக்கமாக பதில் அளித்துள்ளார். இதன் மூலம் தேமுதிக அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை என்பது தெரியவருகிறது.

அதிமுக கூட்டணி தவிர சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவிற்கு இருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் அக்கட்சி ஆராய்ந்து வருவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் தான் விஜயபிரபாகரன் இப்படி பேட்டி அளித்துள்ளார். விஜயபிரபாகரன் தேமுதிகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால் அவர் தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பேசியிருப்பதில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப்போகிறது என்று கேட்கலாம். ஆனால் அவர் தனது தந்தை மற்றும் தாயின் மனதை நிச்சயம் அறிந்து வைத்திருப்பார். அதனால் தான் கூட்டணி தொடர்பாக இந்த அளவிற்க அவர் தெளிவாக பேசியுள்ளார்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அதே ஒற்றுமையுடன் நீடிக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவி வருகிறது. எந்தநேரத்தில் எந்த கட்சி கூட்டணியை முறிக்கும் என்கிற கேள்வி எழுந்து நிற்கிறது. இதற்கு காரணம் அதிமுகவிற்கு சட்டப்பேரவை தேர்தலில் வெல்லும் வாய்ப்பு குறை என்கிற எண்ணம் தான் என்கிறார்கள். அதே சமயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக என மூன்று கட்சிக்குமே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கனவு உண்டு. எனவே அதற்கு தகுந்தாற்போல் தான் அவர்களின் வியூகம் இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இப்படி கூட்டணியில் உள்ள கட்சிகள் தினம் தினம் ஒரு கருத்தை கூறி வருவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் கூட்டணி பலத்துடன் தான் திமுகவை வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார். ஆனால் கூட்டணி தொடர்பாக தேமுதிகவிற்காக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற விஜயபிரபாகரன் எல்லாம் பேசுவது எடப்பாடியின் ஆளுமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.