சொந்தப் பிரச்சனைக்காக இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் வேணும்னா அவங்களைப் பிடிச்சு தொங்கட்டும் நமக்கு என்ன தலை எழுத்தா? நாம் இனி பாஜக அரசை கடுமையாக எதிர்ப்போம் என நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது அதிமுக எம்.பி.க்கள் பகீர் கிளப்பியது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மட்டும்ல்லாமல் அமித்ஷாவையும் அதிர வைத்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பாஜக வுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே அமித்ஷாவின் உத்தரவு.

இது தொடர்பாக சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை தொடர்பு கொண்ட அமித்ஷா, தீர்மானத்துக்கு ஆதரவாக  வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் அதிமுகவிடம் பெயருக்குக் கூட இது குறித்து பாஜக சார்பில் எதுவும்  கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.பி.க்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கலகத்தை கிளப்பியுள்ளனர்.

இதன் தொடக்கமாகத்தான் மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. டாக்டர் வேணுகோபால் பாஜக அரசை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். சபாநாயகர் சீட்டில் அமர்ந்திருந்த தம்பிதுரையும் இதை ரசித்துக்  கேட்டுக் கொண்டிருந்தார். தென் சென்னை எம்.பி. ஜெயவர்த்தனும் கடுமையாக மத்திய அரசை தாக்கிப் பேசினார். பாஜகவினருக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஒன்றுகூடிய அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிக்கலாமா ? அல்லது சிவசேனா போல் வெளிநடப்பு செய்யலாமா என விவாதம் செய்துள்ளனர். அன்வர்ராஜா,  வனரோஜா, உதயகுமார்,  நாகராஜன் போன்ற எம்.பி.க்கள் கறாராக பாஜகவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளனர்.

இவர்களின் பேச்சால் அதிர்ச்சியான அமித்ஷாவும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் உடனடியாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்த் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் பதறிப்போன இரட்டையர்கள் உடனடியாக எம்.பி.க்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்துள்ளனர்

ஆனாலும் 4 வாக்குகள் பாஜகவுக்கு எதிராகவே விழுந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் சுமூகமாக முடிந்தாலும், அதிமுக எம்.பி.க்கள் கொதித்துப் போயுள்ளனர். கொஞ்சம்கூட பாஜக அமைச்சர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை  என்றும், தொகுதி தொடர்பாக எந்த உதவியும் செய்வதில்லை என்றும் அவர்கள் புகார் வாசிக்கின்றனர்.

ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் அவர்கள் சொந்தப் பிரச்சனைகளுக்காக பாஜகவை ஆதரிக்கட்டும் நமக்கு என்ன வந்தது? நாம் அனைவரும் ஒற்றுகையாக மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.