அதற்கு சட்டப்படி அவர்கள் பதில் சொல்ல வேண்டும், தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் இல்லை என்றால் நிரபராதி என வெளியில் வரட்டும். இது தான் திமுகவின் நிலைபாடு. யாரையும் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. 

முப்பத்தி இரண்டு முன்னாள் அமைச்சர்களும் சிறைக்கு செல்வது உறுதி என திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அல்ல சட்ட ரீதியாக அவர்களை உள்ளே தள்ளும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எதிராக பாஜக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தேர்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும், பாஜக தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்து வருகிறது. அதே நேரத்தில் எதிர்க் கட்சியான அதிமுகவும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ். பி வேலுமணி, கே.சி வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆவசங்களை கைப்பற்றி அது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருக்கு சொந்தமான 62 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்த மாஜிக்களை குறிவைத்து தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் இந்த தொடர் நடவடிக்கையால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் திமுக அரசை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்கள் தோறும் ஆர்பாட்டம் நடைபெற்றது. தேனியில் ஓ.பன்னீர்செல்வம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, கோவை தொண்டாமுத்தூரில் எஸ்.பி வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி என போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

அதேபோல் விழுப்புரத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய திமுக அரசு பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால் இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே மர்மமாக உள்ளது. காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியுடன், எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக நீங்கள் நடந்து கொள்வீர்களானால், அதற்கான பின் விளைவுகளை நீங்கள் கண்டிப்பாக சந்திப்பீர்கள் என்று எச்சரித்திருந்தனர். இதே நேரத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக சுமத்தப்படுள்ள வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறையாகி உள்ளார். இது ஒரு புறம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக தேனி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச் செல்வன் அதிமுக ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

ராஜேந்திரபாலாஜி விவகாரத்தைப் பொறுத்தவரையில் உப்பு திண்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. தன் மீது தவறு இல்லை என்றால் அவர் நேரடியாக ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவரோ ஒடி மறைகிறார். அவர் அமைச்சராக இருந்தபோது திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் வாய்க்கு வந்தபடி அவதூறாக பேசினார் என்பதற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு உரிய முறையில் தண்டனை உள்ளது. ஆனால் கே.டி ராஜேந்திர பாலாஜி தவறு செய்திருக்கிறார். அதனாலதான் அவர் தலைமறைவாகியிருக்கிறார். நிச்சயம் அவர் தண்டனையை அனுபவிப்பார். ஏற்கனவே ஆளுநரிடம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி உட்பட 32 அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் கொடுத்திருக்கிறோம். அனைத்தையும் நாங்கள் ஆதாரபூர்வமாக கொடுத்திருக்கிறோம். அரசாங்கம் கையில் இருக்கிறது என்பதால் யாரையும் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. சட்டப்படி அவர்களை அரசு சந்திப்போம்.

அதற்கு சட்டப்படி அவர்கள் பதில் சொல்ல வேண்டும், தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் இல்லை என்றால் நிரபராதி என வெளியில் வரட்டும். இது தான் திமுகவின் நிலைபாடு. யாரையும் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டத்தின்போது போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே என்று கூறுகிறார், இது வேடிக்கையாக உள்ளது. ஆளுநரிடம் அவர் மீது கொடுத்துள்ள புகாரில் அவர் 5 ஆயிரம் கோடி ரூபாய் நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்து இருக்கிறார் என்பதுதான். அதன் மீது வழக்கு இருக்கும் போது ஏன் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டே வாங்குகிறார்? அவர் தவறு செய்திருப்பதால் தானே அவர் உச்ச நீதிமன்றம் ஸ்டே வாங்குகிறார். நாங்கள் ஆளுநரிடம் கொடுத்த மனு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. தவறு செய்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். கைது செய்யப்படுவார்கள். யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஆனால் யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆட்சிக்கு வந்த உடனேயே 32 அமைச்சர்களையும் தூக்கி உள்ளே வைத்திருக்க முடியும். ஆனால் அப்படி நாங்கள் செய்யவில்லை. அப்படி செய்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கூறுவார்கள். அதனால்தான் நியாயப்படி, சட்டப்படி உரிய தண்டனை அவர்களுக்கு பெற்று தருவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.