கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த தனியார்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் முக்கிய மூன்று அதிபாகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது.

அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து இருந்தது. உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேரம் பேசியது தெரியவந்தது.

 

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமனம் செய்யப்பட்டார். 

இதற்கிடையே  இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பி.எச்டி ஆய்வாளர் ஒருவரும், உதவி பேராசிரியர் ஒருவரும், கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் அதிகாரி ஒருவரும்  சம்பந்தப்படிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மூவருக்கும் பல்கலைக்கழகத்தின் மேலிடத்துக்கும் நல்ல லிங்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மூவரையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.