ரூ.3 கோடி மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியிருக்கும் ராஜேந்திர பாலாஜி மீது, மேலும் 3 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூ.3 கோடி மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியிருக்கும் ராஜேந்திர பாலாஜி மீது, மேலும் 3 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். இதனிடையே விமானம் மூலம் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுக்கு தப்பிச்செல்வதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸை காவல் துறை அனுப்பி உள்ளது. இது மட்டுமின்றி செல்போன் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவர்களது செல்போன்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதாக தகவல் வெளியானதால், தூத்துக்குடி கடற்கரையில் இருந்து வேதாரண்யம் வரையிலான கடற்கரை பகுதிகள் மற்றும் தனுஷ்கோடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மேலும் 3 மோசடி புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி., மனோகரன் தெரிவித்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 பேரிடம் தலா ரூ.7 லட்சம் பெற்றுகொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
