தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் எகிறிக்கொண்டே போகிறது.கடந்த 4 நாட்களாக 4 ஆயிரத்தை தாண்டி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.தமிழக அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் 16எம்எல்ஏக்களை கொரோனா சுற்றி வளைத்திருக்கிறது.


தமிழகத்தில் எம்எல்ஏக்களில் முதன்முதலாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி)கொரோனாவால் உயிரிழந்தார்.அவரைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாவது அதிகரித்தது. அந்த வகையில் திமுக எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான் (செஞ்சி), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி.அரசு (செய்யூர்), கடலூர் மாவட்ட செயலாளர் கணேசன் (திட்டக்குடி) ஆகியோரும், அதிமுக எம்எல்ஏக்கள் பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜுனன் (கோவை தெற்கு) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலோபர் கபீல் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். இந்த வரிசையில் மேலும் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 16 எம்.எல்.ஏக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான செங்குட்டுவன்(63), கொரோனா ஊரடங்கு காலம் முதல் நிவாரண பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இருமல், காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மாலை ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செங்குட்டுவன் எம்எல்ஏ, கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய முடிவு செய்துள்ளனர்.  இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரு நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.