ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு அரசை வீழ்த்தி அறுதி பெரும்பான்மையுடன் கடந்த மே மாதம் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது. அதுமுதல் பல அதிரடியான திட்டங்களை ஜெகன் மோகன் நிறைவேற்றி வருகிறார். 2014 ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்து தனி மாநிலமாக உருவெடுத்தது. ஹைதராபாத், 10 ஆண்டுகளுக்கு இருமாநிலத்திற்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்றும் அதற்குள்ளாக ஆந்திரா தனது புதிய தலைநகரை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமராவதியை ஆந்திராவின் தலைநகராக உருவாக்குவதற்கான பணிகளை சந்திரபாபு தலைமையிலான அரசு முன்னெடுத்தது. இந்தநிலையில் ஆந்திராவிற்கு 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கான பணிகளை ஜெகன் மோகன் அரசு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை நிா்வாக தலைநகராகவும், கா்னூலை நீதித் துறைக்கான தலைநகராகவும் உருவாக்க வேண்டும் என ஆந்திரா சட்டப்பேரவையில் அவர் பேசியிருக்கிறார். இதற்காக தற்போது குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, தமிழகத்திற்கு நிர்வாக வசதிக்காக 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. சென்னையிலிருந்து திருச்சிக்கு நிர்வாக தலைநகரை மாற்றும் திட்டத்தையும் சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் அந்த திட்டத்தை கையிலெடுத்திருப்பது சீமான் கூறியது போல இருக்கிறதே என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே சீமான் கட்சியினர் ஆந்திராவில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் தங்கள் செயல்பாட்டு வரைவில் இருப்பவை தான் என்று கூறி வரும் நிலையில், 3 தலைநகரங்கள் உருவாக்குவதையும் தங்கள் திட்டம் தான் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.