2nd day income tax raid in sasikala relatives residence and offices

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் உறவினர் வீடு மற்றும் நிறுவனங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் வரி ஏய்ப்பு செய்யும், நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆபரேஷன் கிளீன் மணி, என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த மாதம் 9 ஆம் தேதி வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.



தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை, கோவை நகரங்களில் 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லத்துக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் 6 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதனின் வீட்டுக்குள் புகுந்த 3 அதிகாரிகள் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதே போன்று மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பருக்கு சொந்தமான குடோனிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் போலீஸ் நிலையம் அருகே கேபிள் உள்ளிட்ட மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோனிலும் சோதனை நடைபெற்றது.

ஸ்ரீசாய் குடோனில் சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரி அதிகாரிகள் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலைக்கு சென்றனர். நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்து இருந்தனர். அதிகாரிகள் நேற்று அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.



கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தில் உள்ள எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியின் உரிமையாளர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற வருமான வரித்துறை நடத்திய சோதனையின் ஒரு பகுதியாகவே தற்போது இந்த ஆய்வு நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்றும் ஒரு சில இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.