மதிய உணவு அளித்தால் தான் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் கொண்டு வந்தது போல், தற்போதைய கொரோனா கால கட்டத்தில் இலவசமாக இணையதள இணைப்பிற்கான டேட்டா கொடுத்தால் தான் கல்லூரி மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை முடிக்க முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு திட்டத்தை கொண்ட வந்திருப்பதாக மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. பள்ளிகள் அதிகம் திறந்த போதும் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஆசைப்பட்டாலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்றால் தான் ஒரு வேளை உணவாவது கிடைக்கும் என்கிற நிலையில் இருந்தனர். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் தங்களுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த காமராஜர், பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு அளித்தால் அவர்கள் நிச்சயம் பள்ளிக்கு வருவார்கள் என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் பிறகு மதிய உணவிற்காகவே பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இப்படி காமராஜர் காலத்தில் மதிய உணவிற்காக பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பலரும் படித்து சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகை கொரோனா உலுக்கி எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத நிலை உள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் கூட முழு அளவில் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் கல்வியில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். பேராசிரியர்கள் ஜூம் ஆப், கூகுள் மீட், வாட்ஸ்ஆப் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.

இதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் மொபைல்களுக்கு டேட்டா வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு மாதத்திற்கு 2ஜிபி டேட்டா பயன்படுத்த வேண்டும் என்றால் சராசரியாக ஒருவருக்கு 149 ரூபாய் வரை தேவைப்படும். இதனை சாதாரண கூலி வேலை செய்யும் பெற்றோரை கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளால் கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் கல்லூரிகளை திறக்க முடியாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க டேட்டாவிற்கு என்று மாணவ, மாணவிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது- இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவிகளால் ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற முடியாத நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தான் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 மாதங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தங்கு தடையின்றி தொடர முடியும். மேலும் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான டேட்டாவிற்கு ஆகும் செலவிற்கு தங்கள் பெற்றோரை மாணவ, மாணவிகள் சார்ந்திருக்க வேண்டியிருக்காது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்லூரிகளையும் சேர்ந்த சுமார் 9 லட்சத்து 69ஆயிரம் மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலா 2ஜி டேட்டாவை நான்கு மாதங்களுக்கு வழங்க உள்ளார்.

இதன் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் ஆன்லைன் கல்வியை தங்கு தடையின்றி தொடர முடியும். மேலும் செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அவர்கள் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாகவே தயாராவதும் எளிமையாகியிருக்கிறது. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அதே போல் தங்கள் கல்வியை பூர்த்தி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இலவச டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்று தங்கள் மனதார கல்லூரி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.