300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் உயிரையும் பணயம் வைத்து வேலை பார்த்த 291 தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு கேட்டு போராடிய செங்கொடி சங்கத்தின் தொழிலாளர்களை மாநகராட்சி வேலை நீக்கம் செய்துள்ளது. 

இதில் 114 பேர் மீது வழக்கு பதிவு, 500 பேருக்கு மெமோ என 291 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், தொழிலாளர் விரோதப் போக்கை கைவிடக் கோரியும் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர்கள், தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலை வழங்க வேண்டும், மெமொவை திரும்ப பெற வேண்டும், இனியும் காண்ட்ராக்டர்களை புகுத்தி வேலையை பறிக்கக்கூடாது, அரசாணைப்படி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.