அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குறித்து புகார் அளித்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த, விசாணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த வாரம் இவர் பதவியில் பொறுப்பேற்று விசாரணையை தொடங்கினார். இந்த நிலையில் வரும் வாரத்தில் துணைவேந்தர் சூரப்பா மீது புகார் தெரிவித்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரடியாக அழைத்து விசாரணை நடத்த  விசாரணை அதிகாரி கலையரசன் முடிவு செய்துள்ளார். மேலும் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தனி அலுவலகம் பசுமை வழிச்சாலையில்  அமைக்கப்பட்டுள்ளது. 

முறைகேடுகள் குறித்து  உரிய ஆதாரம் இருப்பவர்கள் நேரடியாக நாளை முதல் நேரில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சூரப்பா மீது சுரேஷ்  என்பவரும், வரதராஜன் என்பவரும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.