இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 28 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பெருமளவில் இதை பாகிஸ்தானியர்கள் பரப்பி வருகின்றனர்.  

என்ன நடக்கிறது:

இந்திய சீன எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது  இந்தோ பாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 28 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.அதை உறுதி செய்யும் வகையில் ஒரு  புகைப்படமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன:

நவம்பர் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக செய்தி நிறுவனமான  ஏ.என்.ஐ தெரிவித்திருந்தது. ஆனால் அதில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது குறித்து எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் இதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு துறையில் இருந்தும், ராணுவ வட்டாரத்திலிருந்தும் எந்த தகவலும் இல்லை. நவம்பர் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்,கெரான்,குரேஸ் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி  இந்திய படைகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் பல பாகிஸ்தான்  பதுங்குகுழிகளை அழித்தது. எல்லையில் நடந்த இந்த மோதலில் 5 பி.எஸ்.எஃப், 1 ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகின. மொத்தத்தில் 6 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தான் ராணுவத்தின் 3 கமாண்டோக்கள் உட்பட 11 வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஆனால் சமூக ஊடகங்களில் 28 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக போலியான புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேடியதில் இந்த புகைப்படங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே பகிரப்பட்டது எனவும், 2020 இந்தோ- பாக் எல்லையில் ஏற்பட்ட தாக்குதலுக்கும் இந்த புகைப்படத்திற்கும்  எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த புகைப் படம் ஜூன்30, 2010 சதீஷ்கரில்  நடந்த நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டே 28 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக சமூக வளைதளத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவது அம்பலமாகி உள்ளது.