சென்னை தலைமை செயலகத்தில் 275 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.69 கோடி மதிப்பிலான 275 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 17 பேருந்துகள், விழுப்புரத்தில் இருந்து 72 பேருந்துகள், சேலத்தில் இருந்து 43 பேருந்துகள், கோவையில் இருந்து 75 பேருந்துகள், கும்பகோணத்தில் இருந்து 68 பேருந்துகள் என மொத்தம் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இவற்றில் மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகளுடன் அகலமான தாழ்தளப் படிக்கட்டுகள், தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பேருந்துகளிலும் நின்று பயணிக்க அகலமான பாதை, பேருந்தின் இருபுறமும் அவசரகால வழிகள், இறங்கும் இடத்தை அறிவிக்க ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

மாற்றுத் திறனாளிகள் இருக்கையில் ஊன்றுகோலை வைக்க இடம், அவர்கள் இறங்கும் இடத்தை தெரிவிக்க பெல் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பேருந்துகளின் எல்.ஈ.டி. வழித்தடப் பெயர்ப் பலகைகள், ஓட்டுநருக்கு மின்விசிறி, பேருந்துக்குள் எல்.ஈ.டி. விளக்குகள் பேருந்து பின்புறம் வருவதை எச்சரிக்க ஒலி எச்சரிக்கைக் கருவி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.