எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222 ஏக்கர் நிலம்  ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக உயர்நீதிமன்றக் கிளையில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்குப் பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்றும் அதிலிருந்து 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார், அதில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது, இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பெரும்  பயனடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக அளவில் பணம் வசூல் செய்யும் சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பலன் பெற்றிருப்பார்கள்.  

எனவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி பணியை துரிதப்படுத்த உத்தரவிடவேண்டும் என  கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் கால அவகாசம் கோரப்பட்டது, அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கொடுப்பதில் காலதாமதம்  ஏன் எனக் கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். பின்னர் மாலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்லபாண்டியன் ஆஜராகி தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைகாக 222 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறி அதற்கான ஆவணங்களையும்  தாக்கல் செய்தார்.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு இன்னும் இடம் ஒப்படைக்கவில்லை என்று கூறி உள்ளதே, ஆனால் தமிழக அரசு சார்பில் முழுமையாக இடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதே, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதுபோன்ற தவறான தகவலை  தந்த அந்த அதிகாரி யார்? 

அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும், தமிழக அரசு முழுமையாக இடம்  ஒப்படைப்பு செய்யப்பட்டதா என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு சார்பில் எய்ம்ஸ்க்கு முழுமையான இடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுவிட்டது என்றும், தற்போது கட்டுமான பணிக்கான கடன் ஒப்பந்தம் ஜப்பானிய நிறுவனத்துடன்  நடைபெற்று வருகிறது எனவும் கூறினார். 

மேலும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அது முடிவடைந்துவிடும், அதிலிருந்து 45 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என தெரிவித்தார். எனவே  இதை கேட்ட நீதிபதிகள் கட்டுமான பணிகள் குறித்து விரிவான உத்தரவிட இருப்பதாக கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.