முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கியிருக்கும் 20 எம்எல்ஏக்களுடன் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச் செல்வனும் இணைந்துள்ளார். டி.டி.வி.தினகரனை அவர் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதையடுத்து தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, அண்மையில் மீண்டும் இணைந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் , இணைந்தபின் சசிகலா கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என அறிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த 19 எம்எல்ஏக்களும், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, டி.டி.வி.தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில்  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன், இன்று டி.டி.வி.தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலைச் செல்வன்,அதிமுக ஆட்சியை கலைக்கவும்,கட்சியை உடைக்கவும் முயற்சிசெய்தவர் ஓபிஎஸ் தான் என்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது பல எம்.எல்.ஏக்களுக்கு  பிடிக்க வில்லை என்று தெரிவித்தார்.

ஆட்சி யை கவிழ்க்க நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ் என்றும் , மேலும் பல எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் கலைச் செல்வன்  கூறினார்.