அலங்காநல்லூரில் 21ம் தேதி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவேன் – “சீமான் ஆவேச பேச்சு”
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு அழகர்கோவில் சாலை பெரியார் சிலை அருகே பந்தல் அமைத்து, ஜல்லிக்கட்டு காளையுடன் நாம் தமிழகர் கட்சி தலைவர் சீமான், தனது கட்சியினருன் சென்று போராட்டத்தை தொடர்ந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக 20ம் தேதி (நாளை) வரை மதுரையில் தங்கி போராடுவேன். மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், 21ம் தேதி அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் ஜீவா நகர், பழங்காநத்தம், செல்லூர், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இளைஞர்கள் பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூரில் இருபிரிவாக நேற்று இரவு போராட்டத்தை தொடர்ந்த மாணவர்களுக்கு அப்பகுதி மக்கள், உணவு பொருட்களை வழங்கினர். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.
