நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 21 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் அதிமுக சார்பில் விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. ஆனால், காலியாக உள்ள 20 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறவில்லை. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதியிலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும்’ என திமுக வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஓசூரில் கட்சிப் பிரமுகர் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்றார். “ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், தானாகவே அவரது பதவி காலியாகிவிட்டது. 

ஆனால், ஓசூர் தொகுதி காலியாக இருக்கிறது என முறைப்படி அறிவிக்காமல் சட்டப்பேரவை அலுவலகம் காலம் தாழ்த்திவருகிறது. இதுபற்றி சபாநாயகரிடம் மனு அளித்தேன். இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து பார்ப்போம். சபாநாயகர் முறைப்படியாக அறிவிக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். 

இதேபோல மோடி அரசு பதவி ஏற்ற பிறகு எல்லா அமைப்புகளையும் தங்களுக்கு சாதகமானதாக மாற்றிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தையும் இதுபோல மாற்றிவிட்டார்கள். வருன் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாறாக, தேர்தல் நடத்தாமல் போனால், தமிழகம் முழுவதும் பொதுமக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்” என்று மு.க. ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.