2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2016 தேர்தலில் வியூக வல்லுநர்களான சுனில் திமுகவுக்கும், ஜான் ஆரோக்கியசாமி பாமகவுக்கும் ஆலோசனைகளை வழங்கினர். பாமகவின் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்கிற சுவரொட்டி தமிழகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு சுனில் தலைமையிலான டீம் உதவி செய்தது. 

இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் பிரசாத் கிஷோர் பெயர் தொடர்ந்து தமிழக அரசியலில் அடிபட்டு வந்தது. முதலில் அதிமுக, பிரசாந்த் கிஷோரை அணுகியதாக கூறப்பட்டது. பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து, திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுனில் விலகியதை அடுத்து பிரசாந்த் கிஷோரை திமுக அணுகியது. இதனிடையே, ரகசியமாக ஸ்டாலினுடன் பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாத் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக இளைஞர்கள் ஐ-பேக் நிறுவனத்துடன் வழியே எங்களுடன் பணிபுரிய உள்ளனர். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் திட்டங்களை செழுமைப்படுத்த ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.