ரஜினி தனி அரசியல் கட்சி என்கிற முடிவில் இருந்து பின்வாங்கிய நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி வேறு ஒரு அரசியல்வியூகத்துடன் 2021 தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சூழலில் தமிழக அரசியல் களத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய நபர்களில் ஒருவராக இருக்க கூடியவர் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இவர் நினைத்தபடி தான் தமிழக அரசியல் களம் சென்றது குறிப்பிடத்தக்கது. சசிகலாவை முதலமைச்சர் பதவியை ஏற்கவிடாமல் தடுத்ததில் குருமூர்த்தியின் பங்கு மிக அதிகம். அதோடு மட்டும் அல்லாமல் ஓபிஎஸ்சை சசிகலாவுடன் மோத வைத்து அதிமுகவை இரண்டாக உடைத்து பிறகு அவர்களை ஒன்றாக சேர்த்ததிலும் குருமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்தார் என்று கூறுவார்கள்.

இப்படி தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய அதிகாரமிக்க நபராக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியை பொறுத்தவரை 2 முக்கிய லட்சியங்கள் தான் அவருக்கு என்பார்கள். ஒன்று திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, இரண்டாவது சசிகலா குடும்பம் மீண்டும் அதிகார மையமாகிவிடக்கூடாது என்பதுதான். இதில் சசிகலா குடும்பத்தை குருமூர்த்தி தனது வியூகத்தால் தமிழக அரசியல் களத்தில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்திவிட்டார் என்பது உண்மை. ஆனால் திமுகவை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அவர் வகுத்த வியூகம் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.

ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்தால் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகள் ரஜினி கட்சிக்கு கிடைக்கும் இதன் மூலம் திமுக பின்னடைவை சந்திக்கும் என்பது தான் ஆடிட்டர் குருமூர்த்தியின் வியூகமாக இருந்தது. மேலும் ரஜினி தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைந்தால் அது தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெறும் என்றும் அவர் நம்பினார். இதற்காக வெளிப்படையாகவே சில சமயங்களில் ரஜினிக்கு ஆதரவாக குருமூர்த்தி பேசி வந்தார்.

ரஜினி கட்சி ஆரம்பிப்பது தொடர்பான சில யோசனைகள், ஆலோசனைகளையும் கூட ஆடிட்டர் குருமூர்த்தி வழங்கி வந்தார். மேலும் ரஜினி நிச்சயம் கட்சி ஆரம்பிப்பார் என்றும் அவர் கூறி வந்தார். இதனை அடிப்படையாக கொண்டே திமுகவிற்கு எதிரான வியூகத்தை ஆடிட்டர் குருமூர்த்தி வகுத்திருந்தார். ஆனால் ரஜினி திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு குட் பை சொல்லும் நிலையில் உள்ளார். இது அவரது ரசிகர்களை விட குருமூர்த்திக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்கிறார்கள். இதனால் ரஜினியை மையமாக வைத்து வேறு ஒரு வியூகத்தை தற்போது குருமூர்த்தி தயார் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போது திமுக அணி வலுவானதாக உள்ளது. அதிமுகவிடம் கூட்டணி பலம், மக்கள் ஆதரவு போன்றவை திமுகவை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. எனவே ரஜினி போன்ற ஒருவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது அல்லது மூன்றாவது அணி ஒன்றுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்றவை திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் என்றும் குருமூர்த்தி நம்புகிறார். உதாரணமாக கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகதலைமையில் அமைந்த மக்கள் நலக்கூட்டணி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பெற்று திமுக பெரும்பான்மை பெறுவதை தடுத்துவிட்டது.

தற்போதும் அதே பாணியில் ரஜினியை வைத்து காய் நகர்த்த குருமூர்த்தி தயாராகி வருகிறார். இது குறித்தே ரஜினியை நேற்று சுமார் 2 மணி நேரம் சந்தித்து குருமூர்த்தி பேசியதாக சொல்கிறார்கள். இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அந்த கூட்டணிக்காக சிலஇடங்களில் பிரச்சாரம் செய்வது அல்லது கடந்த தேர்தலை போல 3வது அணியை உருவாக்கி அதற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வது என்கிற இரண்டு யோசனைகளை ரஜினி முன்பு குருமூர்த்தி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் ரஜினி யோசித்து பதில் அளிப்பதாக கூறி குருமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளாராம்.