யாருக்கும் அடிபணியாத பாஜக, வெல்லமுடியாத இந்தியா(அஜய் பாரத், அடல்பிஜேபி) என்பதுதான் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் முழக்கமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் இறுதிநாளான நேற்று கட்சியின் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பேசினார்கள். 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் தீவிரவாதம், சாதி, மதக்கலவரம் ஆகியவற்றை ஒழித்து அனைவருக்கும் வீடு வழங்கி புதிய இந்தியாவை உருவாக்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பிரதமர் மோடி இறுதிஉரையாற்றுகையில், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை வெல்ல முடியாத இந்தியா, அடிபணியாத பாஜக என்ற முழக்கத்தோடு எதிர்கொள்வோம். நாம் அதிகாரத்தின் மீது பேராசை கொள்ளவில்லை. அதனால்தான் குஜராத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். மக்களும் எங்களை தேர்வு செய்கிறார்கள். 

எதிர்க்கட்சிகள் எங்களின் ஆட்சிக்கு எதிராகவோ, பிரச்சினைகளுக்கு எதிராகவோ போராடவில்லை, பொய்களை கொண்டு மோதுகிறார்கள். 4 ஆண்டுகால ஆட்சியின் நல்ல திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருகிறோம்.  48ஆண்டுகள் ஒரு குடும்பம் நடத்திய ஆட்சிக்கும் 48 மாதங்கள் நாங்கள் செய்த  ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிவார்கள். தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் மீண்டும் நமக்கு எதிராக கூட்டணி அமைக்க முயல்கிறார்கள்.

 

நிச்சயமற்ற தலைமை, தெளிவற்ற கொள்கை, ஊழல் செய்யும் கட்சிகள், ஒற்றுமையின்மை இவற்றின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடியாது. வெவ்வேறு கொள்கைகள் கொண்ட எதிர்க்கட்சிகளால் ஒரே தளத்தில் நின்று போரிட முடியாது. அதிலும் காங்கிரஸ் தலைமை வகிப்பதை யாரும் ஏற்கவில்லை. ஆதலால், பாஜகவுக்கு வரும் தேர்தலில் எந்தவிதமான சவாலும் இல்லை. நாம் வெற்றிப் பயணத்தை தொடங்கி இருக்கிறோம். 4 ஆண்டுகாலத்தில் நாட்டின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் எனப் பேசினார்.