விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட கூடாது என்று பெரிய பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 
தமிழக போலீசும் நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜக அனுமதி கேட்டு இருக்கிறது.

மேடை அமைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைப்பது சரியாக இருக்காது என்று போலீஸ் மறுத்துள்ளது. இது கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று போலீஸ் அந்த இடத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த  எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார்.  இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பலர் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் H. ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது  திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். இதனிடையே, பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறித் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

உயர்நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசிய புகாரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த  போலீசார் ஹெச்.ராஜா உட்பட 8பேரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கட்சியின் முக்கிய தலைவரை பிடிக்க தனிப்படை அமைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.