வேலூர் தொகுதி அதிமுக எம்.பி. செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார் ஆகியோர், அதிமுக  அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக பிரிந்த அணிகள் அண்மையில் மீண்டும் இணைந்தன. போர்க் கொடி தூக்கிய ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ம் டி.டி.வி.தினகரனை ஒதுக்கத் தொடங்கினர். அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கப் போவதாக அறிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். தற்போது இரு தரப்பினரும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர்களான விஜிலா சத்யானந்த் , நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட  6 எம்.பி.க்கள் ஆதரவு அளித்து வந்த நிலையில் தற்போது வேலுர் தொகுதி எம்.பி. செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் தொகுதி எம்.பி. ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று காலை செங்குட்டுவன் மற்றும் உதயகுமார் ஆகியோர் அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.