சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது வட மற்றும் தேன் மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முக்கிய கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதுவரை ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களான கே.பி.அன்பழகன், தங்கமணி, எம்எல்ஏக்களான உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ குமரகுரு, ஸ்ரீபெரும்பத்தூர்  பரமக்குடி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் திமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சில எம்எல்ஏக்களின் குடும்பத்தினரையும் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருமே மருத்துவர்கள். இதனால், அவர்கள் இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதேபோல, சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் கருப்பணன் மகன். கொரோனா உறுதியானதை தொடர்ந்து கருப்பணன் மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.