பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் காரில் ஆவணங்களின்றி மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ரூ.2.10 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் காரில் ஆவணங்களின்றி மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ரூ.2.10 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்கதுரை என்பவர் காரில் மறைத்து வைத்து எடுத்துச்செல்வதாக பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பெரம்பலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சம்மந்தப்பட்ட காரை பலத்த போலீசார் பாதுகாப்போடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று சோதனை நடத்தினர். அப்போது காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்க கதவுகளின் இடுக்குகளில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரில் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 
பறிமுதல் செய்யப்பப்பட்ட பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் எங்கிருந்து யாருக்காக எடுத்துச்செல்லப்பட்டது என்பது குறித்து தங்கதுரை மற்றும் பிரகாகரன் ஆகியோரை கைது அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
