குஜராத்தில் காலியாக உள்ள 4 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. மார்ச் 26ம் தேதி நடப்பதாக இருந்த இந்த தேர்தல், கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. 

வரும் 19ம் தேதி ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜ்ய சபா உறுப்பினர்கள், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுபவர்கள் கிடையாது; மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுபவர்கள். அந்தவகையில், எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் முக்கியம். 

4 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குஜராத்தின் கர்ஜன் தொகுதி எம்.எல்.ஏ-வான அக்‌ஷய் படேலும், கப்ரடா தொகுதி எம்.எல்.ஏ-வான ஜீத்து சௌத்ரியும், தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். குஜராத் சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். 

ராஜினாமா செய்துள்ள இந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேலை சந்தித்தனர். இந்நிலையில், இன்று 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். எஞ்சிய மற்றொருவரும் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குஜராத்தில், மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 103 தொகுதிகளில் வென்ற பாஜக ஆட்சிக்கட்டிலில் உள்ளது. 68 எம்.எல்.ஏக்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால், தற்போது காங்கிரஸின் பலம் 66ஆக குறைந்துள்ளது.