1800 income tax officials from over 200 cars are going through this test.
தமிழ்நாடு புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி, புனே, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி என பல இடங்களில் இருந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் இதற்காக வந்தனர்.
பணப் பரிவர்த்தனைக்கு கணக்கு காட்ட, பெயரளவுக்கு போலியாக செயல்பட்டு வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்டறியப்பட்டதின் அடிப்படையிலேயே வருமான வரி சோதனைக்கு தேவையான விவரங்கள் திரட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிடிவி தினகரன், திவாகரன், விவேக், நடராஜன், மகாதேவன், விவேக்-ன் சகோதரி கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், விவேக்கின் மாமனார், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுக சாமி, மேலும், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுச்சேரியில் லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளை , அக்ரி ராஜேந்திரன், தினகரன் வீடு, திவாகரன் வீடு, திவாகரனின் கல்லூரியில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பேராசிரியர் அன்புக்கரசி, தினகரன் ஆதரவாளர் சித்தார்த்தன், பிரம்மா பிளக்ஸ் செல்வம் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதைதொடர்ந்து திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கலைக்கல்லூரி விடுதியில் இரவு 9 மணியளவில் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.
இதற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து சோதனையை இன்று தொடர வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நேற்று காலை 7 மணிக்கு சுமார் 187 இடங்களில் துவங்கிய வருமான வரிசோதனை 40 இடங்களில் மட்டுமே தற்போது நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 147 இடங்களிலும் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது.
