18 MLAs disqualified The trial begins in the High Court

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார்.

இதன் அடிப்படையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால நோட்டீஸ் அனுப்பினார்.

கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வருகிறது. அந்த மனுவுடன் சேர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில், தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகியுள்ளனர்.

சபாநாயகர் சார்பாக வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், சோமயாஜி, ஆளுநர் சார்பாக வழக்கறிஞர் ராகேஷ் திவேதி , மாநில அரசு சார்பாக வழக்கறிஞர் சுப்ரமணிய பிரசாந்த், 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாக சல்மான் குர்ஷித், துஷ்வந்த தவே, திமுக சார்பில் கபில் சிபில் ஆகிய முத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். 

சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்பது குறித்து, தீர்ப்பு வெளிவந்த பிறகே தெரியவரும்.