18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத காரணத்தால் மக்களவை தேர்தலோடு 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கூறி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் விளக்கமளித்தார். மீதியிருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்காததால் சபாநாயகர் தனபால் அதிரடியாக தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர்ன் ஆகியோர் அடங்கிய  அமர்வில் விசாரணை  நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சத்திய நாராயணா வசம் தீர்ப்பு வழங்க ஒப்படைக்கப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த அவர் அக்டோபர் 25-ம் தேதி வழக்கின் தீர்ப்பை வழங்கினார். அதில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத்தீர்ப்பால், 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை இழந்தனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான சட்டபூர்வ தடை ஏதுமில்லை. ஆகையால் மக்களவை தேர்தலோடு 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.