2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர 17 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். நாளை இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்திய தேர்தல் முடிவுகள் அனைத்தும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்ததால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மின்னணு வாக்குசீட்டு முறையால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

வாக்கு எண்ணிக்கையில் அதிக வித்தியாசங்கள் வெளியானதால் கட்சிகளிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது. ஆனால் உலக அளவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டு முறை பல்வேறு முன்னணி நாடுகளில் நடைமுறை படுத்தாத நிலையில் இந்தியாவில் இயந்திர ஓட்டுப்பதிவு பெரும் பாராட்டை பெற்றிருந்தது. எதிர்கட்சியின் தற்போதைய கோரிக்கை நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் முயற்சி என ஆளும் பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர 17 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் திமுக, அதிமுக தங்களின் நிலைபாடு குறித்து கருத்தை கூறவில்லை. இதனால் வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த 17 கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.