1500 cr investment 51 bank account sealed 215 properties under grilled

ஆயிரத்து 1500கோடி முறைகேடான முதலீடு … 51 வங்கி கணக்குகளுக்கு சீல்... 215 சொத்துக்கள் மீது கிடுக்கிப் பிடி விசாரணை… இப்படி ஜெட் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது சசிகலாவின் உறவினர்கள் மீதான வருமான வரித் துறை ரெய்டு.

கடந்த 9 ஆம் தேதி அதிகாலை சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு பிள்ளையார் சுழி போட்டனர்.



தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி அருகில் இருக்கும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை அலுவலகம், இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், வீடு, அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, சென்னையை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை , சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி இல்லம், கல்லூரி, கோடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் என சென்னை, திருச்சி, மன்னார்குடி, தஞ்சாவூர், பெங்களூரு என 187 இடங்களை தனது ஆக்டோபஸ் கரங்களால் கட்டுக்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை.

அடுத்துடுத்து அதிரடி காட்டிய வருமான வரித்துறையின்ர் தொடர்ந்து 5 நாட்கள் தங்களது பிடியை இறுக்கியதும் திணறிப்போனது சசிகலா குடும்பம். இத்தனை சொத்துக்களா ? இவ்வளவு மிரமாண்டமா? என திகைத்துப்போய் வாய் பிளந்துள்ளனர் அதிகாரிகள்.

சசிகலா உறவினர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில். பெரும்பாலான சொத்துக்களை அவர்கள் நேரடியாக தங்களது பெயரில் வாங்காமல் வேலைக்காரர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள், வர்த்தக தொடர்பில் இருப்பவர்கள் என பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ளனர்.

இது தொடர்பாக 355 பேருக்கு சம்மன் அனுப்பவும், வேலைக்காரர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே சசிகலா குடும்பத்தினர் 1500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக முதலீடு செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 215 சொத்துக்கள் மீது வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 51 வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கையால் சசிகலா குடும்பம் சிக்கித் தவித்து வருகிறது.

இத்தனை சொத்துக்களுக்கும் முறையாக சசிகலா குடும்பத்தினரால் கணக்கு காட்ட முடியுமா? அது சாத்தியமா? இப்பிரச்சனையில் இருந்தது அவர்கள் வெளியில் வருவார்களா ? அல்லது மற்றுமொரு சொத்துக்குவிப்பு வழக்கு இருக்குமா? வருமான வரித்துறையின் கைகளில் தான் அனைத்தும்!