கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர் வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இப்போதிலிருந்தே தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் பத்மநாபபுரம் தொகுதி  பறக்கும்படை தாசில்தார் சரளகுமாரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனையிட்டபோது, 15 கிலோ  55 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் மற்றும்   தங்க நகைகள் இருந்தது  கண்டறியப்பட்டது. அவற்றிற்குரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை  திருவட்டார் தாசில்தார் அஜிதாவிடம் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் ஷிபு, அவருடன் இருந்து பாதுகாவலர் ( security) பிரதீப் கோஷி ஆகியோரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கேரளாவிலிருந்து நாகர்கோவில் பீமா ஜூவல்லறிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பல கோடி மதிப்புடைய தங்கம் எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு  சென்ற சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.