கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 75 மாவட்டங்களில் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர செய்ய மத்திய அரசு முடிவு செய்து மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து சென்னை,காஞ்சிபுரம், ஈரோடு என மூன்று மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த நிலையில் 3 மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க செய்வது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 6 மணி முதல் 31 ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, மருந்தகம் போன்றவை கிடைப்பதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அரசு அறிவித்துள்ளது. வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவுகள் கிடைக்கும் வகையில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.