சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்த 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள்.. 18 மாவட்டங்களுக்கு வழங்குகிறார் முதல்வர்.
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்த 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்த 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 10 லாரிகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கிடும் அடையாளமாக கொடியசைத்து முதல்வர் துவங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1400 ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை 18 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். ஆக்சிஜன் சிலிண்டர் கொள்முதல் செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், சிப்காட் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1915 ஆக்சிஜன் உருளைகள், 2380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள் மற்றும் 3250 ஒட்ட அளவு உருளைகளையும், 5000 ஆக்சிஜன் செரிவூட்டும் கருவிகளையும், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகள் என மொத்தம் 40 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் இறக்குமதி செய்ய ஆணை அளிக்கப்பட்டது.
இதுவரை 515 உருளைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதோடு, 1750 ஆக்சிஜன் ஒழுங்குப்படுத்தும் கருவிகள், 250 மருத்துவ ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள கருவிகள் விரைவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1400 ஆக்சிஜன் உருளைகள் சிங்கப்பூரில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் உருளை கருவிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் 18 மாவட்டங்களுக்கு வழங்க உள்ளார்.