140 Countries have a Dengue Effect
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டோர் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.
டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், டெங்கு நோயின் வேகம் அதிகமாகவே உள்ளது. ஆனாலும், டெங்கு நோய் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உயிரிழப்பவர்கள் எல்லோரும் டெங்கு பாதிப்பால் மரணமடைவதாக கூறி மக்களை திசை திருப்பக் கூடாது என்றார்.
டெங்கு பாதிப்பு தமிழகத்தில் மட்டுமல்ல, 140 நாடுகளில் அதன் பாதிப்பு இருப்பதாக கூறினார். டெங்கு தடுப்பு ஊசிகள் மற்றும் மருந்துகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், அதன் பிறகே டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.
தமிழகம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்தும் விதமாக, கொசுக்களை ஒழிக்கும் பணியில், அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தபோது, டெங்குவைப் பொறுத்தவரை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது என்றும் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருப்பதாக கூறினார்.
140 நாடுகளில் டெங்கு நோயின் தாக்கம் இருக்கிறது என்றும் ஏதோ நம் மாநிலத்தில் மட்டுமே டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது உண்மை அல்ல என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆனாலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 10 பேர் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழப்பவர்களின் குடும்பத்தினரோ, மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
